Saturday, 20 August 2016





லக்னாதிபதி

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி எப்படி இருக்க வேண்டும், அவர் நின்ற நக்ஷத்திராதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.
ஒரு ஜாதகர் தன் ஜாதக பலன் அதாவது அது யோகமாக இருந்தால் அதன் வளர்ச்சியை அனுபவிக்க லக்னாதிபதி, லக்னத்தின் சாராதிபதி, லக்னாதிபதியின் சாராதிபதி பலம் தேவை., தோஷமாக இருந்தாலும் சரி அதை பிராயசித்தம் மூலமாக  சீர் செய்து கொள்ள அவர்களின் பலம் தேவை.  அவர்களின் பலம் இல்லாமல் மற்ற கிரஹங்களின் பலனை அனுபவிக்க முடியாது.  ஷோடஷ வர்கங்களில் குறைந்து ஐந்து வர்க்கங்களில் லக்னாதிபதியோ, அவர் நிற்கும் நக்ஷத்திராதிபதியோ, லக்னம் நிற்கும் நக்ஷத்திராதிபதியோ பலம் பெற்றுவிட்டால் அந்த ஜாதகர் எந்த நிலையிலும் தன்னை தானே உயர்த்திக் கொள்ளும் மனோபலத்தை பெற்று விடுவார்.
ஒருவர் பிரயாசித்தம் எனும் பரிகாரம் செய்ய நல்ல காலம் என்பது உத்ராயண காலமாகும்.  இல்லையென்றால் அவரின் லக்னத்தின் சாரதிபதியையோ, லக்னாதிபதியையோ, அவர் நிற்கும் சாராதிபதியையோ, அல்லது அப்போது நடக்கும் தசா நாதன் அல்லது புத்தி நாதன் இவர்களில் யாரேனும் ஒருவரை அவரின் ஒன்பதாம் அதிபதியோ, அல்லது  குருவோ, கோச்சாரத்தில் பார்க்கும் காலத்தில்  பரிகாரம் செய்யலாம். இந்த அமைப்பு அவர் ஜாதகத்திலேயே இருந்து விட்டால் அவர் எப்போது வேண்டுமானாலும் பரிகாரம் செய்யலாம். பரிகாரம் செய்ய ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட கோயில்கள் சிற்ந்தவை.    
சரி தற்போது கிரஹ ரீதியாக ஒவ்வொருவரும் லக்னாதிபதியாக வந்தாலும், அவர் நிற்கும் சாரதிபதியாக வந்தாலும் அவர் தன் பலத்தை இழந்தால் அதை எப்படி சீர் செய்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
சூரியன் லக்னாதிபதியாக வந்து, அல்லது லக்னம் நிற்கும் நக்ஷத்திராதிபதியாக வந்து பலவீனமாக இருந்தால்,   பாவ ரீதியாக,  ஒன்றாம் பாவமாக இருந்தால் மருத்துவ சிகிச்சை நடக்கும் இடங்களில் குடி நீர் வசதி செய்து கொடுப்பது . அந்திம காரியங்கள் நடக்கும் இடங்களில் விளக்கொளி ஏற்பாடு செய்து கொடுப்பது போன்றவற்றை செய்தால் நல்லது.  ஆதி சிவன் கோயில்  அதாவது உயர்ந்த லிங்க திருமேனி உள்ள கோயில், சங்கர நாயனார் கோயில் வழிபாடு நல்லது.
இரண்டாம் பாவமாக இருந்தால் இஷ்ட தெய்வ கோயிலுக்கு வெல்லம் வாங்கி கொடுப்பது, தேங்காய் வாங்கி கொடுப்பது, எதேனும் வசதியில்லாத ஏழைக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்வது,  உபநேத்ரம் வாங்கி கொடுப்பது அதாவது கண் கண்ணாடி வாங்கி கொடுப்பது ஆகியவை பலவீனத்தை போக்கி நல்ல பலனை தரும்.  திருக்கடையூர் வழிபாடு நல்லது.
மூன்றாம் பாவமாக இருந்தால் முதியோரை எக்காரணம் கொண்டும் ஒதுக்க கூடாது.  அவர்களின் சந்தோஷம் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  மூத்த சகோதரனுக்கு பெண் குழந்தை இருந்தால் அவளின் திருமணத்திற்கு உதவி செய்வது நல்லது அல்லது ஒரு எழை பெண் திருமணத்திற்கு புடவை வாங்கி தருவது நல்லது. 
நான்காம் பாவமாக இருந்தால் தாய் வழி உறவுகளை மதித்து நடந்து கொள்வது நல்லது.  தாய் வழி தாத்தா பாட்டி ஆகியோரை காசிக்கு அழைத்து சென்று வருவது பலம் தரும்.  திருச்சி தாயுமானவர் கோயில் வழிபாடும், அன்னதானத்திற்கு 27 கிலோ அரிசி வாங்கி கொடுப்பது நல்லது. 
ஐந்தாம் பாவமாக இருந்தால்  வாக்கு தவறாமல் இருப்பது நலம்.  இஷ்ட தெய்வ கோயிலுக்கு சர்க்கரை பொங்கல் தானத்திற்க்கு பொருட்கள் வாங்கி கொடுப்பது நல்லது. 27 பிரதோஷ அர்ச்சனைக்கு கோயிலுக்கு வில்வ தழை வாங்கி கொடுப்பது நலம்.  தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது மனோ பலத்தை கூட்டும்.
ஆறாம் பாவமாக இருந்தால் ஏழு வகையான தான்யங்கள் கோயிலுக்கு தானம் செய்வது நல்லது.  இதய நோய் சம்மந்தமாக கஷ்டப்படுபவர்க்களுக்கு அவர்களுக்கு மருந்து வாங்கி கொடுப்பது நல்லது.  தாயின்ரத்த உறவுகள் கஷ்டப்பட்டால் உதவி செய்வது நல்லது.  கடன் வாங்காமல் இருப்பது நலம்.
ஏழாம் பாவமாக இருந்தால் மனைவியை நல்ல முறையில் கவனித்து கொள்வது நல்லது.  பெளர்ணமி பூஜைக்கு அம்பாள் கோயிலுக்கு சிவப்பு சந்தனம் வாங்கி கொடுப்பது நலம்.  கருப்பு பசு மாட்டிற்கு ஞாயிறு தோறும் உணவளிப்பது நலம். லக்ஷமி கோயிலுக்கு  கஸ்தூரி மஞ்சள் வாங்கி கொடுப்பது நலம்.
எட்டாம் பாவமாக இருந்தால் சகோதரர்கள் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்வது நலம். தெற்கு வாயில் உள்ள வீட்டில் குடியிருக்க கூடாது.  எட்டு ஞாயிற்றுக் கிழமை இஷ்ட தெய்வ கோயிலுக்கு வெல்லம் வாங்கி கொடுப்பது நலம்.  உத்தமர் கோயில் வழிபாடு நலம். 
ஒன்பதாம் பாவமாக இருந்தால்  கோதுமை தானம் சிறந்தது.  பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது நலம். வீட்டில் தாமிர பாத்திரத்தில் நீர் வைத்து அந்த நீரில் குளிப்பது நல்லது.  தந்தையின் உடல் நலத்தில் கவனம் கொண்டு அவர் மனம் வருந்தாமல் பார்த்துக் கொள்வது நலம்.  வயதான காலத்தில் அவர்களை தனியே விடாமல் கவனிப்பது நலம்.  குல தெய்வ வழிபாடு பலம் தரும்.
பத்தாம் பாவமாக இருந்தால் நீலம், கருப்பு ஆடைகளை தவிர்ப்பது நலம்.  ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்ன தானம் செய்வது நல்லது.  ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு ஜன்ம தினம் அன்று ஸ்வீட் ( கோதுமைஅல்வா ) கொடுப்பது நலம்.  பித்ரு கர்மாக்களை தவறாமல் செய்வது பலம் சேர்க்கும்.
பதினோராம் பாவமாக இருந்தால் புலால் உண்ணுவதை தவிர்ப்பது நலம்.  குல தெய்வ வழிபாடு அவர்க்கு பால் அபிஷேகமும் பலம் சேர்க்கும்.  மூத்த சகோதரனை தந்தையாக பாவிக்க வேண்டும். அவர் குடும்ப கஷடத்திற்கு  உதவிகள் செய்வது நலம்.  குல தொழிலை உதாசீனப் படுத்தாமல் அதை வளர்ப்பது நலம் சேர்க்கும். தந்தையின் மனம்  வருந்தாமல் கூட்டுக் குடும்பத்தில் இருப்பது நலம்.   
பனிரெண்டாம் பாவமாக இருந்தால் குருடர்களுக்கு உதவி செய்வது நல்லது.  கிழக்கு வாசல் வீடு வளம் சேர்க்கும்.  மிருத்யுஞ்ச ஜபம் செய்வது  நல்லது.  திருவானைக்காவல்,  ஜலகண்டேஷ்வர் வழிபாடு நலம்.


அடுத்த பதிவில் சந்திரனை பார்ப்போம். ………ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.      

ஏன் ஸ்வாதி ஒரு உயர்ந்த நக்ஷத்திரமாக இருக்கிறது




ஒரு நாள் இறைவன் தனது தர்பாருக்கு நவ கோள்களையும் அழைத்தார்.   நவ கோள்களும்  என்ன ஏது என்று ஒன்றும் புரியாமல் அவசரமாக வந்து நின்றனர்.

இறைவன் கேட்டார்.  உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார். கிரஹங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

இறைவான் கேட்டார்:  27 நக்ஷத்திரங்களில் உயர்ந்த நக்ஷத்திரம் எது ?

உடனே வரிசையாக எல்லா கிரஹங்களும் தாங்கள் உச்சமாகும் நக்ஷத்திரத்தை சொன்னார்கள். ஏன் என்றால் அங்கு தானே அவர்களின் பலமும் சுதந்திரமும் உள்ளது.
சூரியன் அஸ்வினியையும்,   சந்திரன் கார்த்திகையையும், செவ்வாய் அவிட்டத்தையும், புதன் ஹஸ்தத்தையும், சுக்ரன் ரேவதியையும், குரு பூசத்தையும், சனி ஸ்வாதியையும் சொன்னார்கள்.

உடனே இறைவன் ராகுவையும், கேதுவையும் கூப்பிட்டு நீங்களும் உங்களுக்கு பிடித்த நக்ஷத்திரம் எது என்று கூறுங்கள்.

உடனே சூரிய சந்திரர்களுக்கு கோபம் வந்தது.   .  இறைவனே எதற்காக இந்த அரூபிகளை அதுவும், அசுரர்களை தெய்வீகத்தோடு இணைக்கிறீர்கள்.  என்று கேட்டனர்.  உடனே இறைவன் அவர்களை அமரச் சொல்லி , என் அரசாங்கத்தில் எல்லோரும் சமம், ஆகவே அவர்களுக்கும் அதில் உரிமை உள்ளது என்றார்.   உடனே ராகுவும் கேதுவும் சனி தேர்ந்தெடுத்த ஸ்வாதியையே சொன்னார்கள். 

ராகு கேதுவை பார்த்து இறைவன் கேட்டார் .  ஏன் நீங்களும் ஸ்வாதியை தேர்ந்தெடுதீர்கள் .  உங்களின் பதிலை கேட்பதற்கு முன் அதை முதலில் சொன்ன சனி பதில் தரட்டும் என்றார்.

உடனே சனி,  இறைவா,  நான் உச்சமாவதால் ஸ்வாதியை சொல்லவில்லை.  அதேபோல் எனது நண்பரான ராகு கும்பத்தில் என்மூல திரிகோண இணைவில் உள்ள சதயத்தின் அதிபதியான அவரின் நக்ஷத்திரம் என்பதால் சொல்லவில்லை.  பின் ஏன் சொன்னேன் என்றால் இந்த ஸ்வாதி ஒன்று தான் உங்களுடைய உலகில் வந்து சேர்வதற்க்கான அதாவது உங்களுடன்பரம பதத்தில் இணைய உகந்த நக்ஷத்திரமாக உள்ளது என்றார்.

உடனே சூரியன் தன் புதல்வனை பார்த்து, பொய் சொல்லாதே என்றார்.  மேலும் தன் மகனை பார்த்து எப்படி ஒரு கொடிய பாபியான அரூபியான ராகுவால் கடவுளை காட்ட முடியும் என்றார்.

உடனே இறைவன் சூரியா அமைதி என்று கர்ஜித்தார்.   நீங்கள் சனியின் பிதாவாக இருக்கலாம். ஆனால் யாம் எல்லோருக்கும் பிதாகாரகன்.  சனி தன் விளக்கத்தை தொடரட்டும் என்றார். 

பெருமானே, இதை நான் ஒரு பறவையின் மூலமாக தான் உணர்ந்தேன் என்றார்.  உடனே இறைவன் எப்படி என கேட்க, சனி தொடர்ந்தார்.   மழை நீரை மட்டுமே உண்டு வாழும் ஒரு பறவை ஒன்றை கண்டேன்.  அதாவது ஸ்வாதியின் உதயத்தில் தான் மழை பெருகும் . வானிலிருந்து பொழியும் அந்த தூய நீரை உண்டு வாழும் பறவை உணர்த்திய தத்துவத்தால் தான் நாம் ஸ்வாதியை சொன்னேன்.

உடனே சூரியன், தன் மகனை பார்த்து ஆவேசத்துடன் இது மட்டும் தானா, வேறு ஏதாவது உண்டா என அலட்சியமாக கேட்டார்.   உடனே சனி,  தந்தையே,  உங்கள் அரசாங்கத்தின் உயர்வை பற்றியே பேசும் நீங்கள், சின்ன சின்ன விஷயத்தை மறந்து பேசுகிறீர்கள். அதனால் தான் உங்கள் உச்சத்தில் ஒரு மனிதன் கோபத்தில் வைராக்யத்தையும், விவேகத்தையும் மறந்து செயல் படுகிறான் என்றார்.  அந்த பறவை, ஏன் கங்கை, யமுனை போன்ற புண்ய நதிகளில் உள்ள நீரை அருந்தாமல் பெருகும் மழை நீரை மட்டும் அருந்தி உயிர் வாழ்கிறது . அதுதான் அதன் வைராக்யம், விவேகம்.

உடனே சூரியன்,  எண்ணை தாண்டி வெகு தூரத்தில் உள்ள உனக்கு புத்தி மழுங்களாகத்தான் இருக்கும் ஏன் என்றால் என் ஒளி பட்டால் தானே எழுச்சியும் வளர்ச்சியும் இருக்கும். உன் பதிலில் இருந்து நன்றாக தெரிகிறது என்றார்.    உடனே சனி குறிக்கிட்டு, தந்தையே இது மந்தமோ மழுங்கலோ இல்லை.  நிதானமான விவேகமும், வைராக்யமும் உள்ள உயர்வு என்றார்.  எந்த வழியில் என்றார்  சூரியன்.   

உடனே சனி தன் விளக்கத்தினை தொடர்ந்தார்.    நீருக்கெல்லாம்  மூலதாரம் ஸ்வாதிதான். அவன் ஆயிரம் நக்ஷத்திரங்களை உடையவன்.  அதன் மூலம் தான் நீர் பெருகும்.  அங்குதான் உங்களின் சக்தி இழக்கப்படுகிறது.  உங்களின் சக்தி இழக்கப்படும் போதெல்லாம் ஒருவனை இறைவனை நோக்கி முன்னேற வைக்கிறது. முப்பெரும் சக்திகளான, பிரம்மா இருப்பதும் நீர் சம்பந்தத்தில் தான், பரந்தாமன் இருப்பதும் நீர் சம்பந்த்தில்தான், பரமேஸ்வரனான இந்த இறைவன் இருப்பதும் நீர் சம்பந்தத்தில் தான்.  அதனால் தான் ஒருவன் தன் முக்திக்கும் மோக்ஷத்திற்கும் நீர் நாடி வருகிறான்.அதுதான் அவனின் விவேகமும் வைராக்யமும் ஆகும். ஏன் பக்ஷிகளும், விருக்ஷங்களும், விலங்குகளும் நீர் இல்லாமல் வாழாது. தானத்தை பெறுவதற்க்கும் தருவதற்கும் நீர் தான் முக்யமானது.   எது நதிகளின் மூலமோ, எது நதிகள் மற்றும் மனிதனின் வாழ்வாதாரத்தை பெருக்குமோ, எது இறைவனிடம் இருந்து பெறப்படுக்கிறதோ, எது அவனிடம் கொண்டு சேர்க்குமோ அதுவே உயர்ந்தது   என்று சனி தன் வாதத்தினை முடித்தார்.   உடனே சூரியன் இறைவனை பார்க்க, இறைவன் புன் முறுவல் பூத்தபடி இருந்தார்.  

எல்லா கிரஹங்களும் கர கோஷத்துடன் சனியை  பாராட்ட,  இறைவன் தன் சனியை தன் அருகில் அழைத்து, அதி அற்புதம் சனி, இனிமேல் நீ ஸ்வாதி உச்சன் என்று அழைகப்படுவதோடு, உன் தான்யமான எள்ளையும், நீ உச்சமாகும் ஸ்வாதியில் பெருகி வரும் நீரையும் சேர்த்து எனக்கு அர்க்யம் விடும் மானிடன் மோக்ஷ கதியை அடைவான். என்றார். மேலும் கால புருஷனுக்கு ஏழில் இருக்கும் ஸ்வாதியில் உச்சமாவதால் அதுவே உன் ஸ்தானத்தின் பலமாகவும் இருக்கும்.

மேலும் கால புருஷனின் கர்ம ஸ்தானதின் காரகனான நீ கால புருஷனின் களத்திர ஸ்தானத்தில் உச்சமாவதால், ஒருவன் தன் தர்ம பத்தினியுடன் ஒளபாசனத்தோடு ஹோமங்களை  செய்ய தகுதி உள்ளவனாகிறான்.  அவன்தரும் அவிசை சந்தோஷத்தோடு உடனே ஏற்கிறேன். உடனே, புதன்,  ஸ்வாதியே சனி, அவனின் கர்மத்தினை காக்கும் ஸ்வாஹாவே அக்னி என்று கூற, இறைவனும் மற்ற கிரஹங்களும் பெரிதாக புன்னகைத்தனர்.  
   
கற்பனையில் உருவான கதை.
நக்ஷத்திரங்களில் உயர்ந்தவன் ஸ்வாதிதான்.    


அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.