Saturday, 23 July 2016

குல தெய்வம்
குலத்தையும் காக்கும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம்.





மனிதன் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.  சில அதில் சந்தோஷத்தை கொண்டு வரும்.  சில மனக் கவலையை தரும்.  சந்தோஷத்தை கொண்டு வரும் போது அவன் எதை பற்றியும் கவலை படுவதில்லை.  ஆனால் மனக் கவலை வரும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறான்.  அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்ப பெரியவர்களை கேட்கிறான்.  சிலர் குடும்ப வழக்கப்படி கோடாங்கியை கேட்டு உடுக்கடித்து தெய்வ குறி கேட்பார்கள்.  சிலர் ஜாதகத்தை குடும்ப ஜோசியரிடம் காட்டி என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள்.  அதற்கு அவர் உங்கள் பூர்வீகத்தை சேர்ந்த குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகும் என்பார்கள்.  சில குடும்பத்தில் குடும்ப பெரியவர்கள் இருப்பார்கள் .  அவர்களுக்கு அவர்கள் பரம்பரையில் வரும் குல தெய்வம் எது என்று தெரியும். உடனே சென்று பரிகாரம் செய்வார்கள்.  சிலருக்கு பரம்பரை குல தெய்வம் எது என்று தெரியாது.  அவர்கள் என்ன செய்வார்கள்.  ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டு பிடிக்க முடியுமா.  நிச்சயமாக முடியும். 

ஒரு ஜாதகத்தில்  தெய்வ ஸ்தானம் என்பது ஐந்தாம் இடமும் ஒன்பதாம் இடமும் ஆகும்.  ஐந்தாம் இடம் பூர்வ புண்யஸ்தானம்.  தந்தை வழி பாட்டனார்களை சொல்லுமிடம். அதன் ஐந்தாம் இடம் ஜாதகத்தின் ஒன்பதாம் பாவமாகும்.  அவர்களின் இஷ்ட தேவதையை சொல்லுமிடம்.  அதேபோல் ஒன்பதாம் இடத்திற்கு ஒன்பதாம் இடம் ஐந்தாம் பாவமாகும்.  அதாவது தந்தை வழிபட்ட  தெய்வத்தை சொல்லுமிடமாகும்.  ஆகவே இந்த இரு இடங்களை கொண்டு குல தெய்வங்களை கண்டு பிடிக்கலாம் .  இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசிய எனக் கண்டு அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா என தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் உள்ளதா, நீர் ராசியில் உள்ளதா, என்பதை தெரிந்து கொண்டு அதன் இருக்குமிடத்தை கண்டு கொள்ளலாம். அதாவது  ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடஙகளுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால் வயல் வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் நின்றால் மலை மேல் இருக்கும்.  காற்று ராசியில் நின்றால் அது இடம் மாறி நிற்கலாம்.  இது ஜாதகர் மூத்த பிள்ளையாக இருந்தால் அவர் ஜாதகத்தில் இருந்து கண்டு பிடிக்கலாம்.

ஒரு குடும்பத்திற்கு குல தெய்வம் ஒன்றும் அதன் பரிவார தெய்வங்கள் இரண்டு சம்பந்தம் கொள்ளும்.  அதாவது ஒருவரின் பூர்வீகத்தில்  அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறை பங்காளிகள் மூன்று தலைமுறையாக  ஒன்று சேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களா அந்த ஊரில் இருக்கும்.  இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சிலர் கேட்கலாம்  எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை.  இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை.  என்ன செய்வது என்று கேட்டால் அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.   நிறைந்த வெள்ளிக் கிழமை   அன்று ஸ்வாமி சன்னதியில் (பூஜை அறையில்)   விடியற்காலை பிரம்ம முஹூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கக்ப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு எற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய வஸ்த்திரம் சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு , வைத்து, சர்க்கரை பொங்கலிட்டு தீபம், தூபம் காட்டி,  எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம் . ஆகவே எங்கள் குலதெய்வத்தை நினைத்து,  தங்களையே அவராக பாவித்து இந்த படையலை சமர்ப்பிக்கிறோம்.  இதனை தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தை காட்டுவீராக  என்று வேண்டிக் கொண்டால் விரைவில் உங்கள் முன் தென்படுவார்.  அவர் இருக்கும் இடத்தை காட்டுவார். 

இன்னொரு முறை இருக்கிறது.   உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையை கழுவி மஞ்சள் பூசி, குங்குமம் , சந்தனம் இட்டு  வஸ்த்திரம் சாற்றி, வெற்றிலை பாக்கு பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற் சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால் உங்கள் குல தெய்வம் கண்ணில் படும்.   மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம்.  அது பெருமாளாக இருக்கலாம்,  சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம்.   பின் காவல் தெய்வங்களாக ஒரு கருப்பு வரும். அது பெண் தெய்வமாக இருக்கலாம் அல்லது ஆண் தெய்வமாக இருக்கலாம்.  மொத்தத்தில் பதினெட்டு ஆண் கருப்பு ( இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும்)  பதினெட்டு பெண் காவல் தெய்வங்கள்.  அவை யாவை என பார்ப்போம்.

ஐய்யனார்,  மதுரை வீரன்,  காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன், சப்பாணி கருப்பன், சோனமுத்து கருப்பன், முனியாண்டி, பெரியாண்டவர், பால்முனி, வண்னிகருப்பு சாமி, மந்தை கருப்புசாமி, ஒத்தைபனை கருப்பு,  சுடலை மாடன், மாசான கருப்புசாமி, வலநாட்டு கருப்பு சாமி, பதினெட்டாம்படிக் கருப்பன், சந்தான கருப்பன், பால்பாரை முத்து கருப்பு சாமி, கரடையன் சாமி, காட்டு கருப்பு சாமி, புளியாடி கருப்பு, காரையாடி சின்ன கருப்பு, வேட்டை கருப்பு சாமி, குள்ள கருப்பு சாமி, பெருங்காடு கருப்புசாமி, பொன்னுவீரையன் கருப்பு சாமி, கோட்டை கருப்பு சாமி,  மூடுபாறை கருப்பு சாமி, கிள்ளிக்கூண்டு கருப்பு சாமி, மலையாள கருப்பு சாமி, கள்ளன் களச்சி கருப்பு சாமி, பாவாடை ராயன், சாஸ்தா.  இவர்கள் ஆண் கருப்பு  தெய்வங்கள். ஊரை காக்கும் எல்லை  தெய்வங்கள்.

வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லை பிடாரி,  பெரியாச்சி, எல்லை மாரி,  பேச்சியம்மன், பூவாடைகாரி,  செல்லியம்மன், கன்னிமார்,  சீலைகாரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்க்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன்,  இவர்கள் பெண் கருப்பு எல்லை தெய்வங்கள்.   

குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று  அவர்களுக்கு செய்யவேண்டியதை செய்து, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் குலம் தழைத்து, வரும் சந்ததிகள் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்கும். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.    உங்கள் கையால் ஒரு சாதரண அபிஷேகம்,  ஒரு வஸ்த்திரம், ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு.  இதை கொடுத்தாலே பொதும்.  அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று எந்த கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள். 

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி , சனி இவர்க்கள் 6,8,12ம் இடங்களில் மறைந்தாலோ,  நீச்சப் பட்டாலோ நீங்கள் உங்கள் குல தெய்வங்களை சரியாக வழிபடவில்லை என்று அர்த்தம்.  குல தெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் தள்ளி போகும்.  ஆகவே எல்லோரும் தவறாது குல தெய்வ வழிபாட்டை செய்து சந்தோஷமாயிருங்கள்.       

நாள் செய்யாததை கோள் செய்யும்.  கோள் செய்யாதை குல தெய்வம் செய்யும்.

வாழ்க வளமுடன். ……… அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.


Wednesday, 6 July 2016


பாரம்பர்யத்தைத்தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறோம்
இதெற்கெல்லாம் காரணம் மனதை இயக்கும் மனோகாரகனா?



என்தாத்தாவின் வீடு இது.  என் அப்பா 40 வருடத்திற்க்கு முன் ஆரம்பித்த கம்பெனி இது. இன்னும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. என் அம்மாவிற்க்கு அவங்க அம்மா கொடுத்த நகை இது .நன்றாக இருக்கிறது அல்லவா. இந்த மாதிரி சொத்து, நகை போன்ற விஷயங்களில் பாரம்பர்யத்தை கெளவரபடுத்திக் கொண்டிருக்கிற நாம், நம்மைச் சேர்ந்த பெரியவர்கள்  நம்மைச் செய்யச் சொல்லுகிற சில நல்ல விஷயங்களை பழைய பஞ்சாங்கம், மூட நம்பிக்கை என்று கிண்டலடிகிற , ஒதுக்கி தள்ளுகிற மனோபாவத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அன்றைய கால பெரியவர்கள் தனக்கோ அல்லது தன் குடும்பத்தார்க்கோ ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்றால் தன்மனம் மற்றும் உடலை வருத்திக் கொண்டு சில பரிகாரங்களைச் செய்தார்கள். அதற்க்காக பல நாட்கள் தவமிருந்தார்கள். ஆனால் இன்றைய கால இளைஞர்கள் இன்ஸ்டெண்ட் புட் என்று சொல்வோமே அதைப்போல் இருக்கிறார்கள் . அவசரம், அவசரம் என்று எல்லா விஷயங்களிலும் ஒரு வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே உடனே நடக்கவேண்டும், உடனே கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் நாம் செல்கிற வழி சரிதானா என்று கூட பார்க்காமல் சென்று விடுகிறார்கள்.  அதற்கு அவர்கள் சொல்கிற காரணம் இன்றைய உலகம் வேகமாக செல்கிறது, அதற்கு ஏற்றார்போல் நாமும் செல்லவேண்டும் என்கிற நொண்டிச்சாக்குதான். 

கூட்டுக் குடும்பத்தில் வாழ பிடிக்கவில்லை , ஆனால் தன்னுடைய நண்பர்கள் குடும்பத்தில் ஒன்றிவிடுகிறார்கள்.  தன் குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு சரியல்லை என்றால் ஒடி வந்து உதவ முடிய நேரம் இல்லை என்று சொல்லும் நாம் , வெளியில் ஒருவருக்கு உதவ நம் வேலை எத்தனை இருந்தாலும் ஒதுக்கிவிட்டு அதற்க்காக மெனக்கெடுகிறோம்.   நண்பனின் குடும்பத்தில் ஒரு வயதானவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவருக்காக மருத்துவ மனைக்கு செல்கிற நாம், நம் வீட்டில் இருக்கிற பெரியவர்களை எப்படி நடத்துகிறோம்.  அவர்களை முதியவர்கள் காப்பகத்தில் கொண்டு ஒப்படைக்கிறோம்.  ஏன் ஏல்லா விஷயத்திலும் நம் மனம் மாறுபட்டு நிற்கிறது. 

இந்த மனமாற்றத்தை செய்கிறது யார்.    தினசரி ஒரு நக்ஷத்திரம் வீதம் தன் பாதையை மாற்றிகொண்டு அதிவேகமாக 27 நாட்களில் ஒரு ராசி மண்டலத்தை கடக்கும் சந்திரன் ஆவார்.

சந்த்ரமா மனஸோ ஜாதக என்று வேதத்தில் சொல்வதுண்டு. இந்த சந்திரன் தன் வேகத்தில் தான் கடக்கும் பாதையில் அதே வேகத்தில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறார்.   காலையில் கோபப்படும் நாம் மாலையில் சாந்தமாகிவிடுகிறோம்.   எப்படி இது சாத்யமாகிவிடுகிறது.    ஒருவரின் மனோ நிலையை ஜாதக ரீதியாக மாற்றுவதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.   ஜாதகத்தில் 27 நக்ஷத்திரங்களில் உள்ள 108 பாதங்களுக்கு ஏற்ப அவர்  தன் நிலையை மாற்றிக் கொள்கிறார்.    ஏன் சார்,  மொத்தமே 27 நக்ஷத்திரங்கள் தானே அதற்கு 108 பாதங்கள்.  ஒவ்வொரு மாதமும் அதே பாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் இது பொருந்துமே   என்று கேட்கலாம்.ஆனால், மற்ற கிரஹ நிலைகளின்  பாத சஞ்சாரத்திற்கு ஏற்ப , இவர் இருக்கும் நக்ஷத்திர பாத தொடர்பு,  பார்வை சேர்க்கை இவைகளுக்கு ஏற்ப மாறுபடும். 

சூரியனின் தொடர்பு இவருக்கு நக்ஷத்திர ரீதியாக ஏற்பட்டால் பேச்சே அதிகாரமாக இருக்கும். எப்போதுமே முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  உயர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.  ஒரு சபையில் ஒரு விழாவில் தனக்கு யாரேனும் மரியாதை தரவில்லை என்றால் கோபப்படுவார்கள்.  அதை சொல்லி காட்டுவார்கள்.  

சுய தொடர்பு ஏற்பட்டால் மன சஞ்சலம் அதிகமாக இருக்கும்.  தான் என்ன பேசினோம் என்பதை கவனத்தில் கொள்ளாமல் சில சமயம்  மாற்றி பேசுவார். பேச்சில் ஒரு வித சலனம் இருக்கும். மனதில் பாச உணர்வு அதிகமாக இருக்கும்.   தன் தாயை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  

செவ்வாயின் தொடர்பில் இருந்தால் வார்த்தைகளில் உஷ்ணம் இருக்கும்.  எதிலும் ஒரு அவசர புத்தி இருக்கும்.  சில சமயம் ரத்தக் கொதிப்பு நோய் வர வாய்ப்புண்டு.  ஒரு வேலையை உடனே முடித்துவிட வேண்டும் என்கிற வேகம் இருக்கும். அதற்காக மிகவும் மன அழுத்தம் அடைவார்கள். எதெற்கெடுத்தாலும் கோபப் படும் குணம் உண்டு.   அடுத்தவர் பேச்சை நிதானமாக கேட்கும் குணம் இருக்காது.

புதனின் தொடர்பில் இருக்குமானால் மனதில் எப்போதும் ஒரு வித பதட்டத்துடன் கணக்கு போட்டுக் கொண்டு இருப்பார். பேச்சும் ஒருவித ஆதாயத்துடன் இருக்கும்.  தாய் மாமன் உறவை மதிப்பார்கள்.  எப்போதுமே மனதிற்குள் நோயின் தாக்கம் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.   அடுத்தவர் மனைவியின் மேல் ஆசை படும் குணம் வரும்.  தோட்டத்தில் உலாவுவது பிடிக்கும். பசுமையை அதிகம் விரும்புவார்கள்.    

குருவின் தொடர்பில் இருந்தால் மனதில் எப்பதும் ஆன்மீக சிந்தனையும், அது தொடர்பான பேச்சும் இருக்கும்.  பேச்சில் ஒரு வித பணிவு பக்தி இருக்கும்.  எப்போதும் மனதில் ஒரு ஸ்லோகத்தை சொல்லும் வழக்கம் உடையவர்களாய் இருப்பார்கள்.  தினமும் கோயிலுக்கு செல்லும் வழக்கமும், நெற்றியில் சந்தனமோ, குங்குமமோ வைக்கும் வழக்கம் இருக்கும்.   குழந்தைகளை அதிகம் நேசிப்பார்கள்.  பேச்சில் ஒரு கண்டிப்பு இருக்கும்.  குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  அதிகமாக சண்டை போடும் குணம் இருக்காது.  மன அமைதி இருக்கும்.  

சுக்ரனின் தொடர்பில் இருந்தால் பேச்சில் ஒருவித இனிமை, அதேசம்யம் ஒருவித செக்ஸ் உணர்வு , மயக்கம்  இருக்கும்.  இவர் பேச்சை கேட்பதற்கு என்றே பெண் நண்பர்கள் இருப்பார்கள். எல்லோரிடமும் வலிய சென்று பேசுவார்கள்.  பணம் சம்பாதிபபதில் குறியாக இருப்பார்கள்.  தன் சுற்றத்தார் வசதியை பார்த்து பொறாமைபடும் குணம் வரும்.  தன் மனைவியை அதிகம் நேசிப்பார்கள்.  

சனியில் தொடர்பு  பேச்சில் ஒரு விரக்தி இருக்கும்.   தன் கஷடங்களையே பேசிக் கொண்டு இருப்பார்கள். கூட்டத்தில் பேசுவதற்கு சங்கடப்படுவார்கள்.  தான்எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு திருப்தி இல்லாத நிலைமை இருக்கும்.  அடிக்கடி வேலை மாறுவார்கள். 

ராகுவின் தொடர்பில் இருந்தால் பேச்சில் ஒரு வேகம் இருக்கும். அலங்காரம், வாய்பந்தல் என்று சொல்வார்களே அப்படி இருக்கும். ஒரு விஷயத்தை அதிகமாக பேசுவார்கள்.  மனதில் அதிகம் பேராசை இருக்கும்.  வெளிநாடு சென்று சம்பாதிக்கும் திறன் வரும்.   ஆடம்பரமான பொருட்களின் மீது அதிக ஆசை வரும். 

கேதுவின் தொடர்பில் இருந்தால் தன் முடியாமையை  அதாவது இயலாமையை பற்றி பேசுவார். உடம்பில் இருக்கும் நோயை பற்றி அதிகம் பேசுவார்கள்.  போதை பொருட்களின் மீது ஆசை வரும்.  சில சமயங்களில்  தன் வரம்புக்கு மீறிய செயல்களை செய்து  சிறைக்கு செல்லவும் வாய்ப்புண்டு.  இந்த அமைப்பில் சிலர் எல்லாவற்றையும் துறந்து சித்தர் போல் வாழ்வார்கள்.

மனோகாரகன் எந்த பாவத்தில் பலவீனப்படுகிறாரோ  அந்த பாவத்தின் காரகத்துவத்திற்கேற்ப அவர் சங்கடங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும்.
பலவீன படும் இடங்கள் லக்னமாக இருந்தால் சுய பலம் இல்லாதவராகவும்,   இரண்டில் இருந்தால் குடும்ப வறுமையும், தன வருவாயில் தடைகளும்,   மூன்றில் தைரியம் இல்லாதவராகவும், வீரியம் குறைந்தவராகவும்,  நான்கில் தாயின் பாசம் கிடைக்காதவராகவும், சொத்து இருந்தும் அதை அனுபவிக்க முடியாதவராகவும், இருப்பார்.
ஐந்தில் இருந்தால் குழந்தைகளால் ஆதாயம் இல்லாதவராகவும், சில சமயம் குழந்தை பிறப்பு தாமதமாகவும் இருக்கும்.  மந்த புத்தி இருக்கும்.   ஆறில் இருந்தால் அடிக்கடி நோய் தாக்கும்.  ஜலதோஷம், சளி, இருமல் போன்ற நோயின் தாக்கம் அடிக்கடி இருக்கும்.  அடிக்கடி கடன் வாங்குவார்கள்.    ஏழில் இருந்தால் வரும் மனைவியியால் சுகம் கிடைப்பது அரிது.   வரும் மனைவி மனோபலம் இல்லாதவராகவும், எதையும் தாங்கும் சக்தி இல்லாதவராகவும் இருப்பார்.

எட்டில் நின்றால் நீடித்த நோய் இருக்கும்.   எல்லா விஷயங்களிலும் தடை தாமதங்கள்  ஏற்பட்டு ஜாதகரை அதிக துன்பத்தில் தள்ளும்.  தாய்க்கு அடிக்கடி உடல் நலத்தில் சங்கடங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் வரும்.   ஒன்பதில் இருந்தால் தந்தையின் பாசம் கிடைப்பது அரிதாகும். தந்தைக்கும் ஜாதகருக்கும் அடிக்கடி மனதளவில் வேறுபாடு இருக்கும்.  சந்தோஷங்கள் வாழ்க்கையில் கிடைப்பது அரிதாகும்.   
பத்தில் பலவீனமானால்  அடிக்கடி வேலை மாறுவார்கள்.  செய்யும் வேலையில் மனத்திருப்தி இல்லாதவராக இருப்பார்.  தொழில் சிறக்காது.   பதினொன்றில்  ஆசைகள் நிறைவேறாது.  மூத்த சகோதர உறவு பாதிக்கும்.  பனிரெண்டில் இருந்தால் வாழ்க்கையில் துரதிருஷ்டம், தடை தாமதங்கள், தூக்கமின்மை ஆகியவை இருக்கும்.

இங்கு பலவீனம் என்பது,  அஸ்தங்கம், கிரஹயுத்தம், கொடிய பாபர்களோடு சேர்வது, நீச்சம் ஆவது, நீச்சகிரஹ சேர்க்கை பெறுவது, இவருக்கு வீடு கொடுத்தவன், இவர் நின்ற நக்ஷத்திராதிபதி நீச்சமாவது ஆகியவை ஆகும்.   சில சமயங்களில் பலவீனமான இவரோடு, கேது, புதன், ராகு, மாந்தி சேர்ந்தால் கேட்கவே வேண்டாம் புத்தியே பேதலித்துவிடும்.  மன நோய் உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஆகவே ஜாதகத்தில் இவர் பலம் பெறுவது நல்லது.   அல்லது இவரோடு பலம் பெற்ற சுப கிரஹங்கள் சேர்வது நல்லது.  நான்கில் சுப பலம் பெற்றால் சந்தோஷங்கள் கிடைக்கும்.  ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பது நல்லது .  குறைந்தது ஐந்து வர்க்கங்களில் பலம் பெறுவது வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை கொண்டு வரும்.  இவர் மனோகாரகர்.   மனதிற்க்கு காரகமாவதால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  தினம் தினம் நடக்கும் அத்துனை விஷயங்களிலும் இவரின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.   உடைபட்ட நக்ஷத்திரங்களில் இவர் சஞ்சரிக்கும் போதெல்லாம் ஜாதகருக்கு காலையில் இருக்கும் மனோ நிலை மாலையில் இருக்காது.  அதனால் தான் காலையில் கோபபட்டு செல்லும் நபர் மாலையில் பாசத்தோடு வருவார்கள்.  ஜாதகத்தில் பாரம்பர்யம் அதாவது நம் முன்னோர்கள் சம்பந்தபட்ட விஷயங்களில் நம் மனதை ஆத்மார்த்தமாக ஈடுபடவைப்பதும், அப்படி இல்லாமல் ஒதுங்கி போக வைப்பதும் அவர்கள் காட்டும் விஷயங்களில் நம்மை ஆர்வ பட வைப்பதும், அதை இல்லாமல் செய்வதும் இவர் வேலை தான். கூட்டுக்குடும்பத்தில் வாழவைப்பதும், அதை விடுத்து தனிக்குடித்தனம் செய்ய வைப்பதும் இவரே. அதாவது நம் மனம் எந்த கோணத்தில் எந்த விஷயத்தில் வசியமாகிறதோ அதை தொட்டே நம் இயக்கம் இருக்கும்.

ஆகவே ஜாதகத்தில்   ஆத்ம பலத்தை தரும் சூரியனும், மனோபலத்தை தரும் சந்திரனும் பலமாக இருப்பது நல்லது.   இவர்கள் இருவருமே நீச்சமான ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது கடினமாக தான் இருக்கும்.

…………………………………………………..அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
       

   

  

Friday, 1 July 2016




வீடுகள்



ஜாதகத்தில் வீடுகளும் கிரஹங்களும் உறவுகளோடு உறவாடி கூட்டாக வாழ சொல்கிறார்களா, அல்லது உறவுகளை வெறுத்து தனியாக தனிக் குடித்தனமாக வாழ சொல்கிறார்களா.


ஜாதகத்தின்பனிரெண்டு வீடுகளுமே ஒரு ஜாதகனுக்கு முக்கியம்.  ஒரு வீட்டின் தொடர்பு  இல்லாமல் அவன் சுகப்படுவது என்பதே இயலாத காரியம்.  அவன் ஒரு காரியத்தை செய்து சுகப்படவேண்டும் என்றால்  உறவு சார்ந்த பாவங்கள் துணை புரிய வேண்டும்.  

ஒருவன் ஒரு காரியத்தை செய்ய அவனுக்கு முதலில் ஆதம பலம் தேவை.  சுயநலமற்றவனாக, எதையும் எதிர்பார்க்காதவனாக, விட்டு கொடுத்து தியாக உள்ளம் உள்ளவனாக இருக்க லக்னம் எனும் முதல் வீடு சுய பலம் பெறவேண்டும்.

ஒருவன் தன் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்றால் இரண்டாம் பாவமான அவனுக்கு வந்து சேர்ந்த குடும்ப உறவு முறைகளின் ஒத்துழைப்பு வேண்டும். எல்லோரையும் அனுசரித்து பேசும் குணம் வேண்டும்.  

அடுத்து தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப அவன் தம்பி கூட நிற்க வேண்டும்.  அதுவே அவனுக்கு ஒரு பெரிய தைரியத்தை கொடுத்து அந்த செயலை செய்யவைக்கும். அதற்கு மூன்றாம் பாவம் துணை புரிதல் வேண்டும்.

அடுத்து அம்மாவின் ஒத்துழைப்பு . அவளின் மனம் கோணாமால் அந்த விஷயத்திற்கு ஒத்துழைப்பு வேண்டும்.  அவளிடம் இருக்கும் அவளுக்கு அம்மா  போட்ட நகைகளை பிள்ளைகளுக்கு கொடுத்து உதவ நான்காம் பாவத்தின் ஒத்துழைப்பு வேண்டும். அவளை முன்னிருத்தி செய்யும் காரியத்தை பார்த்து சந்தோஷம் கொண்டாலே நமக்கு எல்லா சுகமும் கிடைத்த சந்தோஷம் வரும்.

அடுத்து புத்திசாலிதனமாக ஏற்பாடுகள் செய்து,  பிள்ளைகளின் ஒத்துழைப்போடு அந்த காரியத்தை அவன் செய்யவேண்டும்.  ஒவ்வொரு பிள்ளையும் ஒரு வேலையை எடுத்துக் கொண்டு செய்யவேண்டும். ஊராரெல்லாம், பிள்ளைகள் அப்பாவை கஷ்டப்படுத்தாமல் எப்படி செய்கிறார்கள் என்று போற்றி புகழவேண்டும். அதற்கு நல்ல பூர்வ புண்யம் அமைந்து இருக்க வேண்டும். அதற்கு ஐந்தாம் பாவம் துணை புரிய வேண்டும்.

அடுத்து ஆறாம் பாவமான அம்மான் ஸ்தானம்.   தாய் மாமன் இல்லையென்றால் ஏது ஒரு விசேஷம். அவன் தானே முதல் சீரும், கடை சீரும் தருபவன்.  எந்த விசேஷத்திலும் அம்மான் மொய் தானே முதலில்.  அவனுக்கு தானே முதல் பத்திரிகா.     அவன் தானே மெட்டி வாங்கி தாய் மாமன் சீரோடு தருபவன்.  எனவே அவனின் ஒத்துழைப்பும் தேவை. மேலும் அந்த சமயத்தில் நோய் நொடி தாக்காமல்  சுகமாக நடத்த இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.

அடுத்து ஏழாம் பாவம்   ஜாதகனுக்கு அந்த நேரத்தில் தோள் கொடுக்க நண்பர்கள் முக்கியம். அவர்கள் துணை இன்றியமையாதது.  கூட இருந்து வேலைகளை பிரித்து கொண்டு செய்வார்கள்.எனவே அதுவும் துணை புரிய வேண்டும்.அந்த விழாவிற்கு அழைத்த வெளி நபர்கள் எல்லாம் மன நிறைவோடு  வந்து வாழ்த்த வேண்டும்.

அடுத்து எட்டாம் பாவம்.   அந்த விழாவினை சிறப்பாக நடத்த,   ஏற்கனவே போட்டு வைத்த முதலீடுகளின் வட்டிகள்,  தன் அலுவலகத்தில் போட்டு வைத்த இபிஎப், கிராஜிவிடி முதலியவற்றின் முன் பணம்,   பாரம்பரிய சொத்துக்களை விற்று நடத்த அந்த பாவத்தின் துணையும் வேண்டும்.  தன் மனைவியின் சகோதரன் அந்த குழந்தையின் தாய் மாமனாக வந்து நிற்க வேண்டும். அதற்கு இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.  அதேபோல் விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் எந்த குறையும் சொல்லாமல் மனம் மகிழ நல்ல போஜனம் அமைய இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.

அடுத்து ஒன்பதாம் பாவம் .   தந்தையின் ஆசியும், அவர்களை சார்ந்த உறவு முறைகளும் எந்த சுணக்கமும் காட்டாமால் வந்து இருந்து நடத்தி கொடுக்க இந்த பாவம் துணை புரிய வேண்டும். மேலும் ஜாதகனின் தகப்பன் முன் நிற்க வேண்டும். தன்பிள்ளை கஷட்ப்படக்கூடாது என்று தன்னிடம் உள்ள பொருளை கொடுத்து உதவ இந்த பாவம் முக்கியம்.

அடுத்து தன் அலுவலகத்தில் இருக்கும் ஒத்துழைப்பு.  பணம் பத்தவில்லை என்றால் கூட இருக்கும் அலுவலக நண்பர்கள் கொடுத்து உதவ அவர்களின் ஒத்துழைப்பு,.  வேலை பார்க்கும் அலுவலகத்தில் கேட்டு வாங்கும் முன் பணம் இவைகளுக்கு இந்த பாவம் ஒத்துழைப்பு அவசியம்.

அடுத்து தான் மகிழ்ச்சியாக அந்த விழாவினை நடத்தி முடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேற,  தான் சேர்த்து வைத்த பணம், பொருளையெல்லாம் தன் பிள்ளைக்கு கொடுத்து சந்தோஷப் பட இந்த பாவம் துணை செய்ய வேண்டும்.   அடுத்து தன் சம்மந்தி வீட்டில் ஏந்த குறையும் சொல்லாமல் நிறைவாக செய்ய இந்த பாவம் உதவி புரிய வேண்டும்.

அடுத்து விரய பாவம் எனும் பணிரெண்டாம் பாவம் .  மேற்சொன்ன பாவங்கள் எல்லாம் நல்ல முறையில் துணை புரிந்து உதவிகள் செய்து அந்த விழாவினை சீரும் சிறப்பாக செலவு செய்து கொண்டாட இந்த பாவம் துணை புரிந்தால் தான் ஜாதகனுக்கு நிம்மதியான அயன சயன சுகம் இருக்கும்.    

ஆகவே, ஒரு ஜாதகன், தன் வீட்டில் ஒரு விழாவினை நல்ல முறையில் செய்யவே, இந்த பனிரெண்டு பாவங்களும் துணை புரிய வேண்டும் என்றால், அவன் வாழ்க்கை முழுவதற்க்கும் இந்த பாவங்கள் அணைத்துமே அவனுக்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா.  இவைகளெல்லாம் கூட்டாக இருந்து ஒருவனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் போது,  கூட்டுக் குடும்பத்தை விட்டு தனிமையில் வாழ்வது நியாயமா சகோதர சகோதரிகளே………………………சிந்தியுங்கள்.

நல்லதை எடுத்துச் சொல்ல குடும்பத்தின் தலைவர் என்ற முறையில் சூரியன் தேவை.

பாசத்தை கொடுத்து அரவணைக்க தலைவி என்ற முறையில் சந்திரன் தேவை.

தைரியத்தை கொடுத்து வாழ்வில் முன்னேற தம்பி என்ற முறையில் செவ்வாய் தேவை.

நல்ல புத்தியை கொடுத்து எல்லோரையும் அனுசரித்து செல்ல சமயத்தில் துணைபுரிய மாமன் என்ற முறையில் புதன் தேவை.

கோபம் தாபங்களை குறைக்கும் நிலையை கொடுத்து.  குடும்ப பெரியவர்களின் பேச்சுக்கு ஏற்ப் வாழ நல்ல தெய்வ சிந்தனையும்,  ஆழ்ந்த அறிவும்  தரும் குரு தேவை.

வாழ்க்கையின் சந்தோஷங்களை  தன் மனைவி மக்களோடு கொண்டாட நல்ல வசதியை கொடுத்து அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்த களத்திரம் என்ற முறையில் சுக்ரன் தேவை.

வாழ்க்கையில் சகல வசதிகளையும் அனுபவிக்க, சலியாத உழைப்பை கொடுத்து, உடம்பில் வலுவை சேர்த்து மற்றவர்கள் உயர தன்னை தாழ்த்திக்கொள்ளும் குணத்தை தருபவன் என்ற முறையில் சனி தேவை.

மேல் சொன்னவைகள் எல்லாம் நல்ல யோகமாக மாற ராகு தேவை.

இவையெல்லாம் நன்கு நிறைவேறி,  வயதான காலத்தில் அமைதியும், தெய்வ சிந்தனையும் ஏற்பட்டு, நிம்மதியான வாழ்க்கைக்கு கேது தேவை. 

ஜாதகத்தில் இவர்கள் எல்லோருமே சுபர்கள் தான்.  எப்போது இவர்கள் பாபர்களாக மாறுகிறார்களோ அவர்கள் எதையோ குறிப்பால் உணர்த்துகிறார்கள் என்று அர்த்தம். அதற்கேற்ப ஜாக்கிரதையாக அவர்கள் பாபர்களாக வந்து, அதை தடை செய்யும் போது, அதற்கேற்ப பரிகாரகள் செய்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்
.  

 ……………………………………………………………அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்