Wednesday, 6 July 2016


பாரம்பர்யத்தைத்தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறோம்
இதெற்கெல்லாம் காரணம் மனதை இயக்கும் மனோகாரகனா?



என்தாத்தாவின் வீடு இது.  என் அப்பா 40 வருடத்திற்க்கு முன் ஆரம்பித்த கம்பெனி இது. இன்னும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. என் அம்மாவிற்க்கு அவங்க அம்மா கொடுத்த நகை இது .நன்றாக இருக்கிறது அல்லவா. இந்த மாதிரி சொத்து, நகை போன்ற விஷயங்களில் பாரம்பர்யத்தை கெளவரபடுத்திக் கொண்டிருக்கிற நாம், நம்மைச் சேர்ந்த பெரியவர்கள்  நம்மைச் செய்யச் சொல்லுகிற சில நல்ல விஷயங்களை பழைய பஞ்சாங்கம், மூட நம்பிக்கை என்று கிண்டலடிகிற , ஒதுக்கி தள்ளுகிற மனோபாவத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அன்றைய கால பெரியவர்கள் தனக்கோ அல்லது தன் குடும்பத்தார்க்கோ ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்றால் தன்மனம் மற்றும் உடலை வருத்திக் கொண்டு சில பரிகாரங்களைச் செய்தார்கள். அதற்க்காக பல நாட்கள் தவமிருந்தார்கள். ஆனால் இன்றைய கால இளைஞர்கள் இன்ஸ்டெண்ட் புட் என்று சொல்வோமே அதைப்போல் இருக்கிறார்கள் . அவசரம், அவசரம் என்று எல்லா விஷயங்களிலும் ஒரு வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே உடனே நடக்கவேண்டும், உடனே கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் நாம் செல்கிற வழி சரிதானா என்று கூட பார்க்காமல் சென்று விடுகிறார்கள்.  அதற்கு அவர்கள் சொல்கிற காரணம் இன்றைய உலகம் வேகமாக செல்கிறது, அதற்கு ஏற்றார்போல் நாமும் செல்லவேண்டும் என்கிற நொண்டிச்சாக்குதான். 

கூட்டுக் குடும்பத்தில் வாழ பிடிக்கவில்லை , ஆனால் தன்னுடைய நண்பர்கள் குடும்பத்தில் ஒன்றிவிடுகிறார்கள்.  தன் குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு சரியல்லை என்றால் ஒடி வந்து உதவ முடிய நேரம் இல்லை என்று சொல்லும் நாம் , வெளியில் ஒருவருக்கு உதவ நம் வேலை எத்தனை இருந்தாலும் ஒதுக்கிவிட்டு அதற்க்காக மெனக்கெடுகிறோம்.   நண்பனின் குடும்பத்தில் ஒரு வயதானவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவருக்காக மருத்துவ மனைக்கு செல்கிற நாம், நம் வீட்டில் இருக்கிற பெரியவர்களை எப்படி நடத்துகிறோம்.  அவர்களை முதியவர்கள் காப்பகத்தில் கொண்டு ஒப்படைக்கிறோம்.  ஏன் ஏல்லா விஷயத்திலும் நம் மனம் மாறுபட்டு நிற்கிறது. 

இந்த மனமாற்றத்தை செய்கிறது யார்.    தினசரி ஒரு நக்ஷத்திரம் வீதம் தன் பாதையை மாற்றிகொண்டு அதிவேகமாக 27 நாட்களில் ஒரு ராசி மண்டலத்தை கடக்கும் சந்திரன் ஆவார்.

சந்த்ரமா மனஸோ ஜாதக என்று வேதத்தில் சொல்வதுண்டு. இந்த சந்திரன் தன் வேகத்தில் தான் கடக்கும் பாதையில் அதே வேகத்தில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறார்.   காலையில் கோபப்படும் நாம் மாலையில் சாந்தமாகிவிடுகிறோம்.   எப்படி இது சாத்யமாகிவிடுகிறது.    ஒருவரின் மனோ நிலையை ஜாதக ரீதியாக மாற்றுவதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.   ஜாதகத்தில் 27 நக்ஷத்திரங்களில் உள்ள 108 பாதங்களுக்கு ஏற்ப அவர்  தன் நிலையை மாற்றிக் கொள்கிறார்.    ஏன் சார்,  மொத்தமே 27 நக்ஷத்திரங்கள் தானே அதற்கு 108 பாதங்கள்.  ஒவ்வொரு மாதமும் அதே பாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் இது பொருந்துமே   என்று கேட்கலாம்.ஆனால், மற்ற கிரஹ நிலைகளின்  பாத சஞ்சாரத்திற்கு ஏற்ப , இவர் இருக்கும் நக்ஷத்திர பாத தொடர்பு,  பார்வை சேர்க்கை இவைகளுக்கு ஏற்ப மாறுபடும். 

சூரியனின் தொடர்பு இவருக்கு நக்ஷத்திர ரீதியாக ஏற்பட்டால் பேச்சே அதிகாரமாக இருக்கும். எப்போதுமே முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  உயர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.  ஒரு சபையில் ஒரு விழாவில் தனக்கு யாரேனும் மரியாதை தரவில்லை என்றால் கோபப்படுவார்கள்.  அதை சொல்லி காட்டுவார்கள்.  

சுய தொடர்பு ஏற்பட்டால் மன சஞ்சலம் அதிகமாக இருக்கும்.  தான் என்ன பேசினோம் என்பதை கவனத்தில் கொள்ளாமல் சில சமயம்  மாற்றி பேசுவார். பேச்சில் ஒரு வித சலனம் இருக்கும். மனதில் பாச உணர்வு அதிகமாக இருக்கும்.   தன் தாயை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  

செவ்வாயின் தொடர்பில் இருந்தால் வார்த்தைகளில் உஷ்ணம் இருக்கும்.  எதிலும் ஒரு அவசர புத்தி இருக்கும்.  சில சமயம் ரத்தக் கொதிப்பு நோய் வர வாய்ப்புண்டு.  ஒரு வேலையை உடனே முடித்துவிட வேண்டும் என்கிற வேகம் இருக்கும். அதற்காக மிகவும் மன அழுத்தம் அடைவார்கள். எதெற்கெடுத்தாலும் கோபப் படும் குணம் உண்டு.   அடுத்தவர் பேச்சை நிதானமாக கேட்கும் குணம் இருக்காது.

புதனின் தொடர்பில் இருக்குமானால் மனதில் எப்போதும் ஒரு வித பதட்டத்துடன் கணக்கு போட்டுக் கொண்டு இருப்பார். பேச்சும் ஒருவித ஆதாயத்துடன் இருக்கும்.  தாய் மாமன் உறவை மதிப்பார்கள்.  எப்போதுமே மனதிற்குள் நோயின் தாக்கம் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.   அடுத்தவர் மனைவியின் மேல் ஆசை படும் குணம் வரும்.  தோட்டத்தில் உலாவுவது பிடிக்கும். பசுமையை அதிகம் விரும்புவார்கள்.    

குருவின் தொடர்பில் இருந்தால் மனதில் எப்பதும் ஆன்மீக சிந்தனையும், அது தொடர்பான பேச்சும் இருக்கும்.  பேச்சில் ஒரு வித பணிவு பக்தி இருக்கும்.  எப்போதும் மனதில் ஒரு ஸ்லோகத்தை சொல்லும் வழக்கம் உடையவர்களாய் இருப்பார்கள்.  தினமும் கோயிலுக்கு செல்லும் வழக்கமும், நெற்றியில் சந்தனமோ, குங்குமமோ வைக்கும் வழக்கம் இருக்கும்.   குழந்தைகளை அதிகம் நேசிப்பார்கள்.  பேச்சில் ஒரு கண்டிப்பு இருக்கும்.  குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  அதிகமாக சண்டை போடும் குணம் இருக்காது.  மன அமைதி இருக்கும்.  

சுக்ரனின் தொடர்பில் இருந்தால் பேச்சில் ஒருவித இனிமை, அதேசம்யம் ஒருவித செக்ஸ் உணர்வு , மயக்கம்  இருக்கும்.  இவர் பேச்சை கேட்பதற்கு என்றே பெண் நண்பர்கள் இருப்பார்கள். எல்லோரிடமும் வலிய சென்று பேசுவார்கள்.  பணம் சம்பாதிபபதில் குறியாக இருப்பார்கள்.  தன் சுற்றத்தார் வசதியை பார்த்து பொறாமைபடும் குணம் வரும்.  தன் மனைவியை அதிகம் நேசிப்பார்கள்.  

சனியில் தொடர்பு  பேச்சில் ஒரு விரக்தி இருக்கும்.   தன் கஷடங்களையே பேசிக் கொண்டு இருப்பார்கள். கூட்டத்தில் பேசுவதற்கு சங்கடப்படுவார்கள்.  தான்எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு திருப்தி இல்லாத நிலைமை இருக்கும்.  அடிக்கடி வேலை மாறுவார்கள். 

ராகுவின் தொடர்பில் இருந்தால் பேச்சில் ஒரு வேகம் இருக்கும். அலங்காரம், வாய்பந்தல் என்று சொல்வார்களே அப்படி இருக்கும். ஒரு விஷயத்தை அதிகமாக பேசுவார்கள்.  மனதில் அதிகம் பேராசை இருக்கும்.  வெளிநாடு சென்று சம்பாதிக்கும் திறன் வரும்.   ஆடம்பரமான பொருட்களின் மீது அதிக ஆசை வரும். 

கேதுவின் தொடர்பில் இருந்தால் தன் முடியாமையை  அதாவது இயலாமையை பற்றி பேசுவார். உடம்பில் இருக்கும் நோயை பற்றி அதிகம் பேசுவார்கள்.  போதை பொருட்களின் மீது ஆசை வரும்.  சில சமயங்களில்  தன் வரம்புக்கு மீறிய செயல்களை செய்து  சிறைக்கு செல்லவும் வாய்ப்புண்டு.  இந்த அமைப்பில் சிலர் எல்லாவற்றையும் துறந்து சித்தர் போல் வாழ்வார்கள்.

மனோகாரகன் எந்த பாவத்தில் பலவீனப்படுகிறாரோ  அந்த பாவத்தின் காரகத்துவத்திற்கேற்ப அவர் சங்கடங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும்.
பலவீன படும் இடங்கள் லக்னமாக இருந்தால் சுய பலம் இல்லாதவராகவும்,   இரண்டில் இருந்தால் குடும்ப வறுமையும், தன வருவாயில் தடைகளும்,   மூன்றில் தைரியம் இல்லாதவராகவும், வீரியம் குறைந்தவராகவும்,  நான்கில் தாயின் பாசம் கிடைக்காதவராகவும், சொத்து இருந்தும் அதை அனுபவிக்க முடியாதவராகவும், இருப்பார்.
ஐந்தில் இருந்தால் குழந்தைகளால் ஆதாயம் இல்லாதவராகவும், சில சமயம் குழந்தை பிறப்பு தாமதமாகவும் இருக்கும்.  மந்த புத்தி இருக்கும்.   ஆறில் இருந்தால் அடிக்கடி நோய் தாக்கும்.  ஜலதோஷம், சளி, இருமல் போன்ற நோயின் தாக்கம் அடிக்கடி இருக்கும்.  அடிக்கடி கடன் வாங்குவார்கள்.    ஏழில் இருந்தால் வரும் மனைவியியால் சுகம் கிடைப்பது அரிது.   வரும் மனைவி மனோபலம் இல்லாதவராகவும், எதையும் தாங்கும் சக்தி இல்லாதவராகவும் இருப்பார்.

எட்டில் நின்றால் நீடித்த நோய் இருக்கும்.   எல்லா விஷயங்களிலும் தடை தாமதங்கள்  ஏற்பட்டு ஜாதகரை அதிக துன்பத்தில் தள்ளும்.  தாய்க்கு அடிக்கடி உடல் நலத்தில் சங்கடங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் வரும்.   ஒன்பதில் இருந்தால் தந்தையின் பாசம் கிடைப்பது அரிதாகும். தந்தைக்கும் ஜாதகருக்கும் அடிக்கடி மனதளவில் வேறுபாடு இருக்கும்.  சந்தோஷங்கள் வாழ்க்கையில் கிடைப்பது அரிதாகும்.   
பத்தில் பலவீனமானால்  அடிக்கடி வேலை மாறுவார்கள்.  செய்யும் வேலையில் மனத்திருப்தி இல்லாதவராக இருப்பார்.  தொழில் சிறக்காது.   பதினொன்றில்  ஆசைகள் நிறைவேறாது.  மூத்த சகோதர உறவு பாதிக்கும்.  பனிரெண்டில் இருந்தால் வாழ்க்கையில் துரதிருஷ்டம், தடை தாமதங்கள், தூக்கமின்மை ஆகியவை இருக்கும்.

இங்கு பலவீனம் என்பது,  அஸ்தங்கம், கிரஹயுத்தம், கொடிய பாபர்களோடு சேர்வது, நீச்சம் ஆவது, நீச்சகிரஹ சேர்க்கை பெறுவது, இவருக்கு வீடு கொடுத்தவன், இவர் நின்ற நக்ஷத்திராதிபதி நீச்சமாவது ஆகியவை ஆகும்.   சில சமயங்களில் பலவீனமான இவரோடு, கேது, புதன், ராகு, மாந்தி சேர்ந்தால் கேட்கவே வேண்டாம் புத்தியே பேதலித்துவிடும்.  மன நோய் உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஆகவே ஜாதகத்தில் இவர் பலம் பெறுவது நல்லது.   அல்லது இவரோடு பலம் பெற்ற சுப கிரஹங்கள் சேர்வது நல்லது.  நான்கில் சுப பலம் பெற்றால் சந்தோஷங்கள் கிடைக்கும்.  ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பது நல்லது .  குறைந்தது ஐந்து வர்க்கங்களில் பலம் பெறுவது வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை கொண்டு வரும்.  இவர் மனோகாரகர்.   மனதிற்க்கு காரகமாவதால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  தினம் தினம் நடக்கும் அத்துனை விஷயங்களிலும் இவரின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.   உடைபட்ட நக்ஷத்திரங்களில் இவர் சஞ்சரிக்கும் போதெல்லாம் ஜாதகருக்கு காலையில் இருக்கும் மனோ நிலை மாலையில் இருக்காது.  அதனால் தான் காலையில் கோபபட்டு செல்லும் நபர் மாலையில் பாசத்தோடு வருவார்கள்.  ஜாதகத்தில் பாரம்பர்யம் அதாவது நம் முன்னோர்கள் சம்பந்தபட்ட விஷயங்களில் நம் மனதை ஆத்மார்த்தமாக ஈடுபடவைப்பதும், அப்படி இல்லாமல் ஒதுங்கி போக வைப்பதும் அவர்கள் காட்டும் விஷயங்களில் நம்மை ஆர்வ பட வைப்பதும், அதை இல்லாமல் செய்வதும் இவர் வேலை தான். கூட்டுக்குடும்பத்தில் வாழவைப்பதும், அதை விடுத்து தனிக்குடித்தனம் செய்ய வைப்பதும் இவரே. அதாவது நம் மனம் எந்த கோணத்தில் எந்த விஷயத்தில் வசியமாகிறதோ அதை தொட்டே நம் இயக்கம் இருக்கும்.

ஆகவே ஜாதகத்தில்   ஆத்ம பலத்தை தரும் சூரியனும், மனோபலத்தை தரும் சந்திரனும் பலமாக இருப்பது நல்லது.   இவர்கள் இருவருமே நீச்சமான ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது கடினமாக தான் இருக்கும்.

…………………………………………………..அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
       

   

  

1 comment:

  1. casino online pokies
    Play casino 아프리카 영정 1 online pokies online. Best Casino 2021. Top 10 Free Pokies Games 스포티비365 for 승인전화없는 사이트 2021. The best Free Pokies games 2021. New Online Pokies with the 실시간배팅 best 포커 페이스 Free Spins

    ReplyDelete