Monday, 6 March 2017

எட்டாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்கியமான விதிகள்

 1.  எட்டாமாதியும், லக்னாதிபதியும் சேர்ந்து எட்டில் நின்றால் வேலையில் சரியான வருமானம் இருக்காது.  கூட்டு தொழில் ஆகாது.  தனி வியாபாரம் நல்லது.  இங்கு இரண்டாமாதியும் சேர்ந்து நிற்க  சில சமயங்களில் தனக்கு ஏற்படும் தடை தாமதங்களை கண்டு வாழ்வில் விரக்தி ஏற்பட்டு அவசரப்பட்டு விபரீதமான முடிவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புண்டு.

 2.  எட்டில் லக்னாதிபதி இருந்தாலோ, பரிவர்த்தனை ஆனாலோ, சூதாட்டத்தில் விருப்பம், குதிரை பந்தயத்தில் ஆர்வம், பிறர் பெண் மீது நாட்டம், திருட்டு புத்தி இருக்கும். தீர்க்காயுள் உண்டு.  தன் கஷ்டங்களுக்கு தானே காரணமாவான்.   மேஷ லக்னத்திற்க்கு இது பொருந்தாது.

 3.  11ம் ஆதியும் 8ம் ஆதியும் தொடர்பு கொண்டால் தீடிரென்று நெருங்கிய நண்பர் மரணமடையலாம்.  இவர்கள் இரண்டாம் இடத்தில் சேர்க்கை பெற்றால், நண்பர்களின் சொத்தை ஜாதகர் பராமரிக்கும் நிலை ஏற்படும். ரிஷப லக்னத்திற்கு இது பொருந்தாது.

 4.  9ம் ஆதியும் 8ம் ஆதியும் தொடர்பு கொண்டால் எதிர்கால சிந்தனை அதிகம் இருக்கும்.  மதத்தின் மீது அதிக பற்று இருக்காது.  தந்தையின் மரணத்திற்கு பிறகு உயில் மூலம் சொத்து கிடைக்க வாய்ப்புண்டு.  சொந்த சமூகத்தில் மரியாதை இருக்காது.  சில சமயம் தன் மதத்தில் இருந்து வேறு மதம் மாரக்கூடிய நிலை ஏற்படும்.  மிதுன லக்னத்திற்கு இது பொருந்தாது.

5.  3ம் ஆதியும் 8ம் ஆதியும் சேர்ந்து எட்டில் இருந்தால் ஆன்மீகத்தில் நாட்டம் வரும்.  சொந்த இரத்த சம்மந்தமுள்ளவர் இறப்பால் அவரின் சொத்து இவருக்கு வரும்.  துக்கம் விசாரிக்க செல்லும் போது ஜாதகருக்கு விபத்து ஏற்படலாம். பரிவர்த்தனை பெற்றால் தீர்க்காயுள். சகோதரர்களுக்குள் ஒற்றுமை இருக்காது.  கன்னி லக்னத்திற்கு இது பொருந்தாது.  ஆனால் இந்த லக்னத்திற்கு மூன்றுக்கும் எட்டுக்கும் உடைய செவ்வாய் உச்ச மடைந்தால் இவர்கள் நில சம்மந்தமான வியாபரம் செய்தால் அதிகமாக வில்லங்கத்தில் சிக்குவார்கள்.

 6.  4ம் ஆதியும் 8ம் ஆதியும் சேர்க்கை பெற்றால் அதுவும் 8ல் இருந்தால், ஆரோக்யம் நன்றாக இருக்கும்.  தன வசதி இருக்கும்.  ஆண் வாரிசு வருவதற்கு வாய்ப்பு குறைவு. 

 7.  5ம் ஆதி 8ம் ஆதி தொடர்பு, நல்ல பணவசதி, ஆனால் நிலையில்லாத மனம். பரிவர்த்தனை பெற்றால் பிள்ளைகளுக்கு கஷ்டம்.  சிம்ம லக்னத்திற்க்கு இது பொருந்தாது.

 8.  12ம் ஆதியும் 8ம் ஆதியும் பரிவர்த்தனை பெற்றால் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள்.  அவனே எட்டில் இருந்தால் மறைமுக அதிக செலவுகள்.  தனிக்காட்டு ராஜா.  வாழ்க்கையில் திடீர் உயர்வு.

 9.  4ம் ஆதியும் 7ம் ஆதியும் எட்டில் நின்றால் நல்ல ஆரோக்யம், நல்ல தனம் ஆனால் வாரிசு இருப்பது கஷ்டம்.  ஜாதகன் தன் துணைக்கும்  தாய்க்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளால் மனம் வெறுத்து போகும் சூழ் நிலை வரும்.  ஜாதகனின் தாய் தன் மருமகளை வெறுப்பாள்.  தன் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க விரும்புவாள்.  மூலை லக்னங்களான , கன்னி  ,  மீனம் ஆகியவைகளுக்கு களத்திர சுகத்தை கெடுத்து தார தோஷத்தை ஏற்படுத்தும்.

10.  6ம் ஆதி 8ல் இருதால், நோய் அதிகமாகும். நீடித்த நோயால் கஷ்டப்படுவார்கள்.  பண வசதி இருந்தும் அதை அனுபவிக்க முடியாத  நிலை இருக்கும்.

11.  7ம் ஆதி எட்டில் தொடர்பு கொண்டால் துணைக்கு ஆகாது.  தன் மறைமுக தொடர்புகளுக்கு அதிகம் செலவழிப்பான்.  கடக லக்னத்திற்கு இது பொருந்தாது.  மேஷ லக்னத்திற்கும், துலா லக்னத்திற்கும் இரண்டுக்கு ஏழுக்கும் உடையவர் ஒருவரே ஆவதால், அவர் எட்டில் மறைந்தால்  திருமணத்திற்கு பிறகு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். சில சமயங்களில் திருமண முறிவு ஏற்படலாம். 
  
12.   5ம் ஆதியும் 10 ஆதியும் சேர்ந்து எட்டில் நின்றால், புத்ர தோஷம், தீராத கஷ்டம். அப்படி, பிள்ளைகள் இருந்தால், அவர்கள் ஜாதகனை வயதான காலத்தில் கவனிக்க மாட்டார்கள்.  கடக லக்னதிற்கு  ஐந்துக்கும் பத்துக்கும் உடைய செவ்வாய் யோக காரகான இருப்பதால் நல்ல பலனாக அமைய வேண்டும். ஆனால் ஜாதகருக்கு அந்த யோகம் அமைவது தடைபடும்.

13.  4ம் ஆதியும், 5ம் ஆதியும் எட்டில் நின்றால் பிள்ளைகளுக்கு நோய் உண்டாகும்.  சொத்தில் வில்லங்கம் ஏற்படும்.    துலாம் லக்னத்திற்கு நான்கிற்கும் ஐந்திற்கும் உடைய சனி எட்டில் நிற்கும் போது இந்த பலன் இல்லை. ஆனால் ஜாதகரின் தாய்க்கு நோயின் தாக்கம் இருக்கும்.  பிள்ளைகளால் சில கஷ்டங்களை சந்திப்பார்கள்.

14.  9ம் ஆதியும் 10 ஆதியும் சேர்ந்து 8ல் நின்றால் தாய் தந்தைக்கு கஷ்டம், பூரிவீக நிலச் சொத்தில் வில்லங்கம் ஏற்படும்.   ரிஷப லக்னத்திற்கு இருவருமே ஒருவராக இருப்பதால் இந்த பலன் இல்லை.  ஆனால் ஜாதகர் தந்தைக்கு கர்மம் செய்வதில் பிரச்சனை ஏற்படும்.  அல்லது அந்த சமயத்தில் தந்தையில் அருகில் இல்லாமல் போக நேரிடும்.

15.  2ம் ஆதி 8ம் ஆதி தொடர்பு ஏற்பட அதிக செலவுகள் ஏற்படும். துணை மூலம் கஷ்டங்கள். மனைவி அதிக செலவாளியாக இருக்கு வாய்ப்புண்டு.   மேஷத்திற்கும், துலாதிற்கும் இந்த பலன் கண்டிப்பாக இருக்கும்.

16.  2க் குடையவனும் 11க் குடையவனும் சேர்ந்து 8ல் நின்றால் பொருளாதாரத்தில் தடையும் பணக்கஷ்டமும் ஏற்படும். குடும்ப வறுமை காரணமாக அதிக கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் கஷ்டப்படுவார்கள்.  மேஷ லக்னத்தார்க்கு இது அதிகமாக இருக்கும். 11ம் அதிபதி பாதகாதிபதிதானே அவன் மறையலாமே என்று கேட்பார்கள்.  ஆனால் அவன் விருச்சிகத்தில் அமராமல் இருப்பது நல்லது.  அதுவும் போக காரகனும் சனிக்கு யோக காரகனும் ஆன சுக்ரனோடு சேர்ந்து எட்டில் அமர்வது நல்லதல்ல்.

17. லக்னாதிபதி,  4ம் அதிபதி, 9ம் அதிபதி சேர்ந்து எட்டில் நின்றால் வாழ்க்கையில் வறுமை அதிகமாக இருக்கும்.  சுகத்தை அனுபவிக்க முடியாது.  பாரம்பரிய சொத்துக்களை கடனுக்காக இழக்க வேண்டிவரும். 

18.  4ம் அதிபதி  மட்டும் எட்டில் நின்றால் சொந்த வீட்டை இழக்க நேரிடும். சில பேர் சொந்த வீடு வைத்து இருந்தாலும் அதில் வசிக்க முடியாது.  வாடகை வீட்டில் தான் வசிக்க நேரிடும்.  அப்படியே சொந்த வீட்டில் வசித்தாலும் நிம்மதி இருக்காது.

19.  8ம் அதிபதி நான்கில்  இருந்தால் பரம்பரை நோய் உடம்பில் இருக்கும்.  அது தசா புத்திகளில் தாக்க வாய்ப்புண்டு.  என்றோ காணாமால் போன பொருள் ஒன்று கையில் கிடைக்க வாய்ப்புண்டு.  பாரம்பர்யத்தில் தொலைத்த, கைவிட்டு போன சொத்து அல்லது விலைமதிக்க முடியாத புதையலுக்கு சமமான விஷயங்கள் கைக்கு எட்டும்.

20.பொதுவாகவே எட்டாம் இடம் என்பது எல்லோருக்குமே  கஷ்டத்தை தரும் இடம்.  நீடித்த அதாவது தீராத நோய், தடை தாமதம், வறுமை,விரக்தி இவைகளை தரும் இடமாக இருக்கிறது.  எட்டாம் இடத்துக்காரன் எட்டில் நின்றாலும்,  அல்லது அந்த இடத்துக்கு காரகர் சனி அங்கு நின்றாலும் காரக பாவ நாஸ்தியை தரமாட்டார் .  பூரண ஆயுள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது . ஆயுளை நீட்டித்தாலும்,  கடைசி வரை நோயில்லாத வாழ்க்கை தானே நிம்மதியான வாழ்க்கை.  ஆயுளை நீட்டித்து, நோயின் பிடியில் சிக்கி கட்டிலில் கிடந்து எல்லாவற்றிற்கும் அடுத்தவர் உதவியை நாடி வாழ்வது ஒரு வாழ்க்கையா. அதற்காக பூரண ஆயுள் தேவையில்லை என்று சொல்லவில்லை.  தீர்க்கமான ஆயுளும் தேவை.  நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் தேவை.

பூர்வ புண்யத்தை ஐந்தாம் பாவம் சொன்னாலும் அதனுடைய நான்காவது கேந்திரமான எட்டாமிடம் பூர்வ பாபத்தை சொல்லும்.  அதாவது கர்ம வினைகளை சுட்டி காட்டும் இடம்.
எட்டு என்பது, டெஸ்டினி நம்பர் என்று சொல்வார்கள். எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என்பதை கண்டு பிடிக்க முடியாத எண்.  வாழ்க்கையும் அப்படிதான் எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது.   எட்டில் இருக்கும் அல்லது பார்க்கும், அல்லது அதன் அதிபதி, அவரை பார்க்கும் கிரஹங்களை வைத்து  நம் வாழ்க்கையின் அல்லல்களை தீர்மானித்து, அதை களைய நம் முன்னோர்கள் வழிபட்ட குல தெய்வங்களை தொழுது அதை போக்கி கொள்வோம்.  அந்த காலத்தில்  பூட்டெல்லாம் பார்த்தீர்கள் என்றால் இரும்பில் கருப்பாக எட்டு வடிவில் இருக்கும். அதனால் தான் எட்டின் தாக்கத்தை போக்க கருப்பு தெய்வங்கள் நம் பாதுகாப்பிற்காக வந்து நிற்கும் என்று சொல்வார்கள்.  நாம் வீட்டில் சேர்த்து வைத்த எல்லா பொருட்களுக்கும் காவலாக ஒரு பூட்டு காவலாக இருந்து பாதுகாக்கும் போது, நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கெளுக்கெல்லாம் காவலாக அந்த காவல் தெய்வங்கள் இருந்து நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு, எட்டாமிடத்தை பற்றி கவலை படாமல் குல தெய்வ வழிபாட்டை செய்து வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டுகிறேன்.


 



No comments:

Post a Comment