Friday, 3 March 2017

லக்னங்களின் குணாதிசயங்கள்;

மேஷ லக்னம்:   மாநிற முள்ளவர்.  சில சமயங்களில் கோழை தனம் இருக்கும்.  முன்கோபி.  மந்த புத்தி.  பெண் போக ப்ரியர்.   சுற்றத்தாரை மதிப்பார்   தன் முயற்சியால் முன்னுக்கு வருவார்.  பெரிய குறிக்கோள், ஆவேசம், எதிர்க்கும் தன்மை , எடுத்த காரியத்தை முடிக்கும் தன்மை, கஷ்டத்தை கண்டு பயப்படாமல் முன்னேறும் திறமை, பொது மக்கள் தொடர்பால் புகழ்பெறும் தன்மை,  சில சமயங்களில் முரட்டுத்தனம், மெலிந்த தேகம், உடையவர்.   இரு தாரங்கள் அமைய வாய்ப்புண்டு.   ஆயுதத்தால் காயம் ஏற்படுதல், கல்லால் அடிபடுதல், மரத்திலிருந்து விழுதல், வெட்டுக் காயங்கள்  போன்றவை ஏற்படும்.   அக்கி, காய்ச்சல், சொறி, சிரங்கு வைசூரி, விஷக்கடி போன்றவை ஏற்படும்.

ரிஷப லக்னம்:   நல்ல குணமும், புகழும் உடையவர்.  குரு தெய்வம், இவர்களை மதிப்பவர்.  இந்த லக்னத்தில் பிறப்பவர்கள் ஆயுதப் ப்ரயோகம் செய்யப்பட்டு பிறக்கலாம்.  (அதாவது சிசரின்)   நல்ல அழகான முகம், சதைப்பற்றுள்ள தேகம்.  சிவப்பு நிறம்,  வட்டமான கவர்ச்சியான மற்றவர்களை கவரும் முக அழகு, கருமையான கூந்தல் இருக்கும். இந்த லக்னத்தில் பிறந்த ஆண்கள் கூட நளினமும், மென்மையும் உடையவர்கள் .  சத்யத்தை காப்பாற்றுபவர்கள்.   சுப காரியங்களில் பிரியம் இருக்கும்.   பிறர் சொத்தின் மீது நாட்டம் இருக்கும்.  இலக்கிய ரசனை, சங்கீதத்தில் பிரியம், ஸ்திர புத்தி, சோம்பேறித்தனம், உண்டு.  இனிப்பை அதிகம் விரும்புவர்.   அழகிய ஆடை அணிகலன்களில் விருப்பம். சிற்றின்பத்தில் அதிக ஆர்வம்.  பணக்கார பெரும் புள்ளிகளின் சிநேகம்.  செடி, கொடி, பூஞ்சோலைகளில் அமைப்பதில் ஆர்வம், செல்ல பிராணிகள் வளர்பதில் ஆர்வம். எதையும் அழகாக செய்யும் திறமை , எல்லா சுக போகங்களை அனுபவிப்பதில் ஆர்வம்.    பல் நோய், டான்சில், சுரம், க்ஷயரோகம், கண்டு மாலை போன்ற நோய்கள் தாக்கும்.

மிதுன லக்னம்:  தன தான்யம் உள்ளவர்.  உதாரண புருஷர்கள். புத்திசாலிதனம், மற்றவர்களுக்கு நல்ல நண்பர்கள், சிவப்பு நிறம், சாமர்த்தியம் இனிமையாக பேசும் தன்மை,   தன் குழந்தைகளோடு ஒத்துப்போகும் குணமில்லாமை,  இரண்டு வகையான குணம், வேகமான அதேசமயம் நளினமான நடை,  எப்போதும் இளமை, வாய் ஞாலம்,  விகடமாக பேசும் தன்மை,  அடுத்தவரை உறவாடி கெடுக்கும் தன்மை, ஜோதிடத்தில் புலமை, எந்தத் தொழ்லிலும் ஈடுபடும் தன்மை, கார்டூன், துணுக்கு ஸ்டொனோ கிராபி, ஆசிரியர், எடிட்டர், டெலிபோன், கம்யூனிகேசன் துறை, பத்திரிகை துறை, சங்கீதம் இவை போன்ற தொழில்களில் ஈடுபடுதல்.  ஓயாத சளித்தொல்லை, டிபி,இன்புளூயன்சா, சுவாச சம்பந்தமான தொல்லைகள் இவருக்கு உண்டு.  மனைவி சொல்லை கேட்பவர்.  சிற்றின்பத்தில் நாட்டம் உள்ளவர். இரு களத்திரம் ஏற்படும். 

கடக லக்னம்:   வாக்கு வன்மை, சாமர்த்தியம், குழம்பிய மனம், மற்றவர்களின் துன்பம், இன்பம் இரண்டையும் சமமாக பார்க்கும் தன்மை, உதவி  செய்யும் குணம், எதையும் அழகாக செய்யும், பார்க்கும் தன்மை, மனைவியை அன்புடன் நேசிக்கும் தன்மை, அன்யோன்யமான வாழ்க்கை, பெண்ணாக இருந்தால் தன் கணவனை நல்ல படியாக பார்த்துக்கொள்ளும் தன்மை இருக்கும்.  ஆனால் களத்திர சுகம் குறைவு.   சில சமயம் இவருக்கு வாய்க்கும் பெண்கள் கபட குணம் கொண்டவராகவும், கெளவர பங்கத்தை ஏற்படுதும் குணமுள்ளவராக இருப்பார்.அதிக காம இச்சை உண்டு.   மனைவி வாயாடியாக இருந்தாலும் அவர் பேச்சை கேட்க கூடிய குணமுண்டு.   இவருக்கு வாய்க்கும் மனைவி நோயாளியாக் இருப்பார்.  குழந்தைகள் குறைவு . எப்போதும் ஒரு கவலை இருக்கும்.  கபம் சம்பந்தமான நோய்கள் இருக்கும்.  வீட்டோடு அடைந்து கிடக்கும் குணமுண்டு.  தன் சக்திக்கு மீறி ஆசைபடுவார்கள்.  நீர், கடல் சம்பந்தமான, ஹோட்டல்  , உணவு சம்பந்தமான தொழில்கள் நல்லது.  வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் அடிக்கடி ஏற்படும்.

சிம்ம லக்னம்:  ஓரிடத்தில் நிலையாக வாழ்பவர்கள். தன்னை நாடி எல்லோரையும் வரவழைப்பவர்கள்.  செம்மையான நெறியோடு வாழ்பவர்கள்.  நல்ல கல்வியாளர்கள்.  தனக்கென்று ஓர் வழியை அமைத்துக்கொண்டு வாழ்பவர்கள். பழி பாவத்திற்க்கு அஞ்சுபவர்கள்.  போராடும் குணம் இருக்கும். திட சரீரம், கம்பீரமான பேச்சு, பிறரை அடுக்கும் குணம் இருக்கும் . நல்ல உழைப்பாளி, கலைகளில் வல்லவர்.  தலைவலி, கண் நோய், இதயம் சம்பந்தமான நோய்கள் வரும்.  அரச யோகத்தை தரும் சாமுத்ரிகா லக்ஷணங்களை உடையவர்.  வெளிப்படையாக பேசும் குணமுடையவர்.  அதே சமயம் தெளிவாக பேசுவார்கள். சுதந்திர பிரியர் அதே சமயம் தன் கெளவரம் கெடாமல் பார்த்துக்கொள்வார்கள்.  சங்கீதம், நாடகம், இசை கலைகளில் ஆர்வம் இருக்கும்.  இவருடைய திருமணம், காதல் எதிர்பார்த்த படி  இருக்காது.    அரசுத்துறை, சினிமாத்துறை, பெரிய தொழில்கள்  இவருக்கு அமையலாம். 

கன்னி லக்னம்:  நீள் வட்ட முகம், நடை ஒரு பக்கம் சாய்ந்திருக்கும், நடுத்தரமான நல்ல தோற்றமுடையவர்.  நளினமான பெண்களை போன்ற தன்மை உடையவர்கள்.  எபோதும் இளமைதனம் இருக்கும்.  தயக்கமும், வெட்கமும் கலந்த சுபாவம் உள்ளவர்கள். கலை, இலக்கியம் எழுத்துத் தொழில், இசை தொழில், வழக்குறைஞர், விஞ்ஞானம், கணிதம், ஜோதிடம், பங்கு வர்த்தகம், புத்தக வெளியீட்டார்கள், புத்தக விற்பனையாளர்கள் போன்ற துறைகளில் திறமையானவர்கள். நல்ல சொற்பொழிவாளர்கள். அக்கவுண்ட்ஸ் ஆடிட்டர் , ஜோதிடம் போன்ற துறைகளில் உயர்வார்கள்.  தன் பெற்றோர்களை பாதுகாப்பவர்கள்.  நல்ல குணமுடையவர்கள். இளமையில் கஷ்டப்படுவார்கள்.  நடு வயதிற்க்குமேல் நிம்மதியான வாழ்க்கை உண்டு.  வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை நன்றாக புரிந்துகொண்டு வாழ்பவர்கள்.  சாதுர்யமாகவும், இனிமையாகவும் பேசுவதில் வல்லவர்கள்.  தர்ம குணமும், இரக்க குணமும் இருக்கும். ஆசார அனுஷ்டானங்களில் விருப்பமுள்ளவர்.  வஞ்சக குணமும் இருக்கும்.  பிறரால் தொழில் வாய்ப்பும் முன்னேற்றம்  இருக்கும்.  பொதுவில் செல்வாக்கு இருக்கும். தன்னுடைய பின் வயதில் அதிக சம்பாத்யம் இருக்கும்.  எப்போதும் எதிலும் எச்சரிக்கையாக இருப்பவர்கள்.  தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பெண் சிநேகிதிகள் அதிகம்.  வாதம், பித்தம்,  கபம் மூன்றும் கலந்த நோய்கள் இருக்கும்.   சில சமயங்களில் தன் நிலைமைக்காக , நேர்மையற்ற தொழிலையும் செய்வார்கள். விஷக் காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள், காலரா, சீதபேதி. அல்சர் போன்ற நோய்கள் வரும்.

துலாம் லக்னம்:    நன்கு படித்தவர்கள்.  இரக்கம் இல்லாதவர்கள்.  ஆனால் கொடிய நெஞ்சம் இல்லாதவர்.  எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.   பல கலைகளின் தேர்ச்சி உடையவர்கள்  வெளிப்படையாக பேசுவார்கள்.  நல்ல குணம், புத்தி, பொறுமை, அறிவு வல்லமை, புகழ் இவையாவும் உண்டு. சகல சம்பத்து உடையவர்.   சுக புருஷன்.  அதிகமான வாசனை திரவியங்கள் உபயோகிப்பவர்கள். செல்வ வளம் உண்டு.  மன உறுதி குறைவானவர்கள்.  நல்ல காரியத்தில் விருப்பம் உள்ளவர்கள்.  வியாபாரத்தில் சாமர்த்தியம் அதிகம் உள்ளவர்கள்.  நல்ல சதைப்பிடிப்பான அழகான அங்க அமைப்புள்ளவர்கள். மீசை வைத்துக்கொள்வதில் ப்ரியமுள்ளவர்கள்.  பெண்களை பரவசப்படுத்தும் அழகுள்ளவர்கள்.  பெண்களாக இருந்தால் ஆண்களை அடிமைப்படுத்துவார்கள். நடுத்தர வயதில் திருமணம் நடக்கும்.  இடுப்பு சம்பந்தமான நோய்கள், டயாபடீஸ், குஷ்டரோகம், கிட்னி சம்பந்தமான நோய்கள் இவர்களுக்கு வரும். 

விருச்சிக லக்னம்:  வலிமையான கால்கள், திரண்ட தோள்கள், வேகமான நடை, தோற்றத்தில் முரட்டுத்தனம் இருக்கும். எப்போதும் உற்சாகமான மனதை கொண்டவர்கள், பேச்சில் வன்மையும், அதே நேரம் ஒரு அதிகாரமும் இருக்கும்.
குரூர சுபாவம் இருக்கும்.  உறவினர்களுக்கு விரோதமானவர்கள்.  எடுத்த காரியத்தை தொடர்ந்து செய்ய முடியாதவர்கள்.  காம இச்சைஅதிகம் உள்ளவர்கள். அதே நேரம் தன் மனைவியிடம் அதிக ஆசை உள்ளவர்கள்.  சில சமயம் கலகம் செய்வார்கள்.  ஆனால் சாஸ்த்திரப்படி நடப்பவர்கள். மிடவும் ரகசியமாக காரியங்களை செய்பவர்கள்.   வேஷதாரிகள்.  அளவுக்கு மீறிய ஆசை உடையவர்கள்.  சமூகத்துக்கு விரோதமான காரியங்கள் செய்பவர்களுடன் தொடர்புள்ளவர்கள்.  இவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க முடியாது. இரசயான துறை சுரங்க தொழில், சித்த வைத்யம், குதிரை பந்தயம், சூதாட்டம், காபரே நடனத் தொழில் போன்றவை நடத்துவார்கள்.  விவசாயம், ஸ்போர்ட்ஸ் தொழில் மின்வாரியம் போன்றவையும் அமையலாம்.  மாதவிடாய் கோளாறுகள், குடலிறக்கம், ஹிரண்யா, மறைவிடம் சம்பந்தமான மர்ம நோய்கள், போன்றவை இவர்களுக்கு வரலாம்.

தனுசு லக்னம்:  நல்ல கட்டான உடல் வாகும், சிவந்த நிறமும், மார்பில் அதிக ரோமமும், அதிக தொப்பையும்  உண்டு.   எந்த காரியத்திலும் லாப நஷ்டம் பார்க்கும் குணம் உண்டு.  லக்ஷ்மிகரம் பொருந்தியவர்.  திருமாலின் பொலிவுள்ளவர்.  பரிமள, சுகந்த வாசனை பொருள்களின்மேல் எப்போதும் விருப்பம் உண்டு. நல்ல படிப்பாளி.  தன் தாய் தந்தையை காப்பவர்.  நல்ல சத்யவான்.  குணவான்.  நல்ல பேச்சாளி. நல்ல தனத்தை உடையவன்.  நல்ல உத்யோகம் பார்ப்பவர்.  தெய்வம், அந்தணர், உயர்ந்தோர்போல்  மதிப்புள்ளவர்.  வாகன சுகம், ஆள் அடிமை உள்ளவர்.  நல்ல நாணயமுள்ளவர், கள்ளம் கபடம் இல்லாதவர்.  தன் குறிக்கோளில் கண்ணாக இருப்பவர்.  தத்துவம், ஞானம், வேதாந்தம், முதலியற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.  தர்ம சாஸ்திரம், பொருளாதாரம் இவற்றில் வல்லவர்கள்.  அரசாங்க உத்யோகம் உண்டு.  பாரம்பர்யத்தில் பற்று உள்ளவர். குலத்தை காப்பவர்.  அனைவருக்கும் நம்பிக்கையானவர்.  பணிபுரிவதில் அடக்கமானவர்.  பரோபகார சிந்தனை உண்டு.  தலைமை பொருப்பு, ஆசிரியர், பேராசிரியர், வழக்குறைஞர், ஆடிட்டர், பொருளாதுறை நிபுணர்,

மகர லக்னம்:  திரிலோக சஞ்சாரி,  அலைந்து கொண்டே இருப்பவர், சஞ்சல புத்தி உள்ளவர், பலதுறை, கல்வியும், காரியம் சாதிக்கும் வலிமையும் பெற்றவர்.  பலவகை சிந்தனை உள்ளவர்.  பெருஞ்சாதனை புரிந்து புகழ் பெறுவார்கள்.  ஆனால் சில சமயம் துராசையும் உண்டு. பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமை உண்டு.  சுய நலம் அதிகம். அதிக சினம் வரும். கர்வம் உடையவர். மனைவியிடம் அதிக பற்றுள்ளவர்.  கபடமும், கோணல் புத்தியும் இருக்கும்.  ஒல்லியான உருவம் இருக்கும். வயதுக்கு மீறிய தோற்றம் இருக்கும்.  ஒரு பலன் கருதியே இவர் பிறருக்கு உதவுவார்.  சந்தேக குணம் இருக்கும்.  நண்பர்களுக்கு துரோகம் செய்யும் குணம் இருக்கும்.  ஏதேனும் நோய் இருந்து கொண்டே இருக்கும். அரசு வேலை, தொழிற் சாலையில் அடிமை வேலை, விவசாயம், எண்ணெய் வளம் சம்பந்தப்பட்ட இடங்கள், தோட்ட வேலை முதலிய தொழில்களில் ஈடுபாடு இருக்கும்.  மூட்டு வலி, ரொமாட்டிசம், காலை இழுத்து நடத்தல் போன்ற நோய்கள் இருக்கும்.

கும்ப லக்னம்:   நேர்மை, ஒழுக்கம், உயர்கல்வி, நற்குணம், தீர்க்க ஆலோசனை, அறிவுதிறன், வாக்கு வன்மை உள்ளவர். ஸ்திர புத்தி உள்ளவர்.  அழகிய உருவம் இருக்கும். பிள்ளைகளின் மேல் அதிகம் பாசம் உள்ளவர்.  எல்லோரையும் பகைத்துக் கொள்வதால் இவருக்கு வேண்டாவதர்களே அதிகம். கறுப்பு நிறமுள்ளவர்.  தொப்பை இருக்கும்.  பெரும்பாலும், அழகுக்கும் இவரின் தோற்றத்திற்க்கும் சம்பந்தம் இருக்காது.  எந்த நோய் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் சக்தி இவருக்கு உண்டு.  சிற்ப்ப கலையில் தேற்ச்சி உண்டு.  கலை இலக்கியத்தில் ஆர்வம் உண்டு.  பொதுத் தொண்டில் விருப்பம் இருக்கும்.இருதரப்பு வாதங்களையும் கேட்டு நியாயம் வழங்குவதில் சமர்த்தர்.  நீதிபதி போன்ற பதவிகள் இவரை தேடி வரும்.  எழுத்து தொழில், வேதாந்தம், தத்துவம், ஞானம் போன்றவற்றிலும்  நாட்டம் இருக்கும்.  எதை மேற்கொண்டாலும் அதை திரம்பட செய்து முடிப்பார்.  தியானம், யோகம், ஆசனம், மூச்சு பயிற்சி போன்ற துறைகளில் பற்று இருக்கும்.   மறைமுகமாக பிறருக்கு உதவி செய்வார்.  இல்லறம் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை.  கணவன் மனைவிக்கு ஜோடி பொருத்தம் இருப்பது அரிது.  சீதள பாதிப்பு, இதய நோய், வாத நோய், வெண் குஷ்டம்,போன்ற தோல் நோய்கள் இருக்கும்.  வலிப்பு நோய், கால் முடமாதல் போன்றவையும் இருக்கும்.  

மீன லக்னம்:  கற்றவர்க்கும் மற்றவர்க்கும் நல்லவர்.  பயிற் தொழிலில் நல்ல செல்வம் சேரும்.  நிறைய நிலங்கள் உடையவர்.  எல்லா காரியங்களிலும் வெற்றி அடைவர். ஞானி, பெரியோர், அந்தணர் இவர்களிடம் பக்தி விஸ்வாசம் இருக்கும்.  சத்திய சந்தர்.  முக அழகு இருக்கும்.  வீரமிக்கவர்.  அதிக செல்வம் சேர்ப்பவர்.வாசனை பொருட்களில் அதிக ஆர்வம் இருக்கும்.  எச்சரிக்கையானவர்.  கண் காது நோய்கள் வரும்.  நல்ல பருத்த உடலை உடையவர்கள்.. நல்ல கீர்த்தி உண்டு.  கவலை உடையவர்.  அளவாக உண்பவர்.  ஆடை அணி அலங்கார பிரியர்.  கூர்மையான பார்வை உடையவர்.  மானிறம் உடையவர். சதா கற்பனையில் இருப்பவர்.  சண்டை சச்சரவை விரும்பாதவர்.  அஹிம்சையில் பற்று உள்ளவர்.  சிக்கல்களை சமாளிக்கத் தெரியாமல் அங்கிருந்து நழுவி விடுவார்.  சிற்றின்ப ப்ரியர்.  சதா பெண்களை பார்த்து மகிழும் குணம் உண்டு.  காவியம் நாடகம், சங்கீதம், நடனம் இவற்றி ஈடுபாடு  இருக்கும்.  சினிமா, நாடகத்தை பார்த்து உணர்ச்சிவசப்படுவார்.  தந்திரசாலி.  அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்.  யோகம், தியானம் செய்வதில் விருப்பம் உள்ளவர்.  நீர்நிலை கடல் சம்பந்தமான தொழில் அமையும்.  திரைபடத்துறையும் அமையலாம்.  ஏழ்மை நிலையில் இருந்து உயர்ந்து வசதிகளை பெறுவார்.  நண்பர்களே எதிரிகளாவர். கபம் சம்பந்தமான நோய்கள் தாக்கும்.

மேலே சொன்ன லக்ன ரீதியான விஷயங்கள் எல்லாமே பொதுவானவை.   ஜாதகத்தில் மற்ற பாவதிபதிகளின் நிலைமைக்கு ஏற்பவும், லக்னாதிபதிகளின் நிலைமைக்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடும்.  அதை ஆராய்ந்து பார்த்து பலன் எடுக்கவேண்டும்.


ஜோதிஷ் பாரதி  சு. கிருஷ்ணன், ஆசிரியர், ஸ்ரீ ராமனுஜர் ஜோதிட பயிற்சி பள்ளி.

____________________________________

1 comment:

  1. Male born 25-feb-00 11.03am @ Erode 77° 43' 08"E (77°43.13'E) and 11° 20' 26"N (11°20.44′N)
    மேஷ லக்கினம் துலா ராசி
    லக்கினத்தில் குரு சுக்கிரன்...
    சனி திசை, புதன் புத்தி, புதன் அந்தரம்... பலன் என்ன?

    ReplyDelete